கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலுள்ள வூகான் பகுதியிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளே கதிகலங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸானது பரவத் தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுரன் பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான புகைப்பட ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. இந்த படமானது மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி என்ற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளது.
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளில் பிழைப்புக்காக போகிற இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த எளிய மனிதர்கள் பற்றி பேசுகிறது இந்நாவல். இந்தப் பின்னணியில் சுழலும் இப்புத்தகத்தை திரைக்கதையாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தினை ஓமன், கத்தார், சவுதி ஆகிய இடங்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அரபு நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருப்பதால் படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பினைத் தள்ளி வைத்துள்ளனர். நிலைமை சீரானதும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சூர்யாவை வைத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம் இயக்கப்போவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.