Skip to main content

"முதல் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனா அல்லது ஜூனியர் என்.டி.ஆரா?" - வெற்றிமாறன் பதில்

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

vetrimaaran about his tollywood entry

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான், திரைப் பிரபலம் ரஜினி, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பலர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். 

 

இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தெலுங்கில் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். இதனால் தெலுங்கில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழு, செய்தியாளர்களை அழைத்து சிறப்பு காட்சியை போட்டுக் காண்பித்துள்ளார்கள். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது வெற்றிமாறனிடம், ‘ஜூனியர் என்.டி.ஆரை வைத்து நீங்கள் படம் பண்ணவுள்ளதாகத் தகவல் வந்ததே’ எனக் கேட்டனர். 

 

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், "ஆடுகளம் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனை சந்திப்பதற்காக நான் இங்கு வந்தேன். அதன்பிறகு அவர் என்னை சென்னையில் சந்தித்தார். தமிழ் திரையுலகில் நுழைய ஆர்வமாக இருப்பதாக கூறினார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் கதை சொல்லுங்கள் என்று சொன்னார். அந்த சமயத்தில் அவரிடம் வட சென்னை கதையின் ஒரு முக்கியமான கதாபாத்திரம் குறித்து சொன்னேன். பின்பு அந்த கதாபாத்திரத்தை படத்தில் நீக்கி விட்டேன். ஒரு சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. பின்பு வட சென்னை கதை மீண்டும் புதிதாக எழுதப்பட்டு எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஆடுகளம் முடித்த சமயத்தில் உடனடியாக ஹைதராபாத்தில் மகேஷ் பாபுவையும் சந்தித்தேன். அதுவும் சரியாக வரவில்லை. 

 

அசுரன் படத்திற்குப் பிறகு, ஊரடங்கு சமயத்தில் ஜூனியர் என்டிஆரை சந்தித்துப் பேசினேன். படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நிச்சயம் ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம். அப்படம் திரைக்கு வர காலதாமதம் ஆகும். ஏனெனில், திரைப்படங்களை எடுக்க அதிக நேரங்களை எடுத்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்குச் செல்ல நிறைய நேரம் எடுத்துக் கொள்வேன். அதுதான் பிரச்சனையே" என்றார். 

 

மேலும், "தொடர்ந்து உங்களின் முதல் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுன் அல்லது ஜூனியர் என்.டி.ஆர் இருவரில் யார் நடிப்பார் என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு "காலம் பதில் சொல்லும்" என பதிலளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்