கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு இணையாக மற்ற மொழிப் படங்களான புஷ்பா (தெலுங்கு படம்), கேஜிஎப் (கன்னட படம்), ஆர் ஆர் ஆர் (தெலுங்கு), காந்தாரா (கன்னட படம்) ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக் குவித்தது. ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ்நாட்டில் வெளியாகிறது என்பதற்காகவே அதே நாளில் வெளியாக இருந்த சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரிலீஸ் தேதியையே தள்ளி வைக்கிறோம் என்று தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
காந்தாரா நேரடி கன்னட மொழியாகவே தமிழ்நாட்டு திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுதலால் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியது. இப்படியெல்லாம் தெலுங்கு, கன்னட படங்களுக்கு தமிழ்நாட்டு திரையரங்கமும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.
விஜய் நடித்த வாரிசு படம் வரும் 11-ந் தேதி தமிழில் வெளியாகிறது. ஆனால் தெலுங்கில் மூன்று நாட்கள் கழித்து தான் வெளியாகிறது. இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தில்ராஜுவிடம் கேட்டபோது தெலுங்கில் பெரிய ஹீரோக்களான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியின் படங்கள் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் அவர்களுக்கு வாரிசு படம் போட்டி இல்லை. முதலில் மக்கள் அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு வாரிசு தெலுங்கு படத்திற்கு வரட்டும். தமிழில் 11ஆம் தேதி வெளியாகவுள்ள வாரிசு கண்டிப்பாக வெற்றி பெறும்.
அந்த வெற்றியோடு தெலுங்கில் வெளியானால் வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும். அதே போல தான் இதற்கு முன்னாடி வெளியாகி வெற்றி பெற்ற லவ் டுடே, காந்தாரா உள்ளிட்ட படங்களும். மற்ற மொழிகளில் வெற்றி பெற்று பின்பு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றது. வாரிசு ஒரு குடும்ப பொழுது போக்கு படம். நிச்சயம் தெலுங்கிலும் வெற்றி பெறும்" என்றார்.
தமிழ்நாட்டு நாயகன் என்பதால் வாரிசு படத்தை வியாபார நோக்கில் வெளியாகும் நாளை தள்ளி வைக்கிறார்களா அல்லது தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர் தில்ராஜுக்கு ஏதேனும் அழுத்தம் தரப்படுகிறதா என்று சினிமா வட்டாரங்களில் விமர்சித்து வருகிறார்கள்.