கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்குப் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அரசின் அமைப்பை எதிர்த்து மக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதையொட்டி தினசரி ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக் பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இனவெறிக்கு எதிராக பல பிரபலங்கள் தங்களின் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் குறித்து ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்றொரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார்.
பாடல் வரிகள்:
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
என் காற்றின் கழுத்தில் - யார்
கால்வைத்து அழுத்துவது?
சுவாசக் குழாயில் – யார்
சுவர் ஒன்றை எழுப்பியது?
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
*
எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?
எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?
ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?
தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?
காக்கையும் உயிரினம்
கருமையும் ஒரு நிறம்
எல்லா மனிதரும் ஒரே தரம்
எண்ணிப்பாரு ஒரு தரம்
மாளிகை நிறத்தை மாற்றுங்கள் - ஒரு
பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்
நீங்கள் பகல் நாங்கள் இரவு
இரண்டும் இல்லையேல் காலமே இல்லை
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை!