திருடா திருடி உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவரும் தனுஷ் ரசிகர் மன்றத்தின் தற்போதைய நிர்வாகத்தை கவனித்து வருபவருமான இயக்குநர் சுப்ரமணியம் சிவாவை சமீபத்தில் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் ரசிகர் மன்ற செயல்பாடுகள், தனுஷுடன் மீண்டும் இணைவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார். அவை பின்வருமாறு...
எனக்கு டான்ஸ் ஆடுவது பிடிக்காது. அது ரொம்ப கஷ்டம் என்று தனுஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். திருடா திருடி படத்தில் மன்மத ராசா பாடல் படப்பிடிப்பு அனுபவம் பற்றி கூறுங்கள்?
தனுஷ் மிகச்சிறந்த டான்ஸர். அதே நேரத்தில் அவர் நடிப்பதை மிகவும் விரும்பக்கூடியவர். ஒரு நடிகர் வளர வளர அவர் படத்தில் சண்டைக்காட்சி மற்றும் நடனக்காட்சிகள் இயற்கைத்தன்மை இல்லாமல் செயற்கைத்தனமாய் மாறிவிடுகின்றன. 'ஜில் ப்ரோ' பாடலில் அவருடைய டான்ஸை பார்த்து மிரண்டுவிட்டேன். என்னங்க இப்படி ஆடியிருக்கிங்க என்று அவரிடமே கேட்டேன். தற்போது யதார்த்த நடிப்பை தனுஷ் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். கேமரா முன்னால் நின்று இவர் நடிக்கிறார் என்றில்லாமல் இயல்பாக பயணிப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதனால் டான்ஸ் ஆடுவது பிடிக்கவில்லை என்று அவர் கூறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
திருடா திருடி படத்திற்குப் பிறகு மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சீடன் படத்திற்காக மீண்டும் இணைந்தீர்கள். அந்தப் படம் ஏன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று நினைக்கிறீர்கள்?
சீடன் ஆன்மீகம் சம்பந்தமான கதைக்களம். அது இளைஞர்களை எந்த அளவிற்கு ஈர்க்கும் என்று தெரியாது. தனுஷின் ரசிகர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான். 50 வயதைக் கடந்த பிறகுதான் ஒரு மனிதன் ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொள்வான். இளம் வயதாக இருக்கும்போது அவர்கள் ஞானத்தை நோக்கி வரமாட்டார்கள். தன்னம்பிக்கை இருக்கும்வரை தோல்வியை ஒரு மனிதன் ஒப்புக்கொள்ளமாட்டான். இளைஞராக இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். 45 வயதைக் கடக்கும்போதுதான் தன்னம்பிக்கையை மீறி ஒரு சக்தி வேண்டும் என்று உணர ஆரம்பிப்பான். குடும்ப ரசிகர்களுக்கு அந்தப் படம் பிடித்திருந்தது.
தனுஷின் ரசிகர் மன்றம் முழுவதையும் நீங்கள்தான் கவனித்துக்கொள்கிறீர்கள். அது பற்றி கூறுங்கள்.
ரசிகர் மன்றத்தில் நேரடியாக பத்து லட்சம் பேர் உள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகத்தை நான் கவனித்துக்கொள்கிறேன். ஏதாவது இயற்கை பேரிடர் ஏற்படும்போது அந்தந்த மாவட்டத்திலுள்ள நிர்வாகிகள் மக்களுக்கு உதவிகள் செய்வார்கள். அதை எனக்கு தெரியப்படுத்துவார்கள். நான் தனுஷிற்கு தெரியப்படுத்துவேன். தனுஷால் என்ன செய்ய முடியுமோ அதையும் அவர் செய்வார். ரசிகர் மன்றத்தில் உள்ளவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களுக்கென்று எதிர்காலம் உள்ளது. அவர்களும் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். அதனால் மன்ற வேலைகளை முழுநேர வேலையாக வைத்துக்கொள்வதில்லை. படம் ரிலீஸாகும்போது அது தொடர்பான வேலைகள் ஒரு வாரத்திற்கு இருக்கும். மற்றபடி, அவர்கள் அவர்களுடைய வேலைகளை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இன்றைக்கு உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் ரொம்பவும் பொறுப்பாக இருக்கிறார்கள். ஏதாவது மீட்டிங் என்று சொன்னால்கூட ஞாயிற்றுக்கிழமை வைத்துக்கொள்வோம் என்கிறார்கள்.
நீங்கள் தனுஷுடன் இணைந்து மீண்டும் படம் பண்ணுவது எப்போது?
கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லாமே தள்ளிப்போய்விட்டது. விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ணுவோம். குடும்ப படமாக அப்படம் இருக்கும்.
படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளீர்கள். அது பற்றி கூறுங்கள்?
தற்போது ரைட்டர் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அந்தப் படத்தின் இயக்குநர் ப்ராங்ளின் எனக்கு ஃபோன் செய்து நான் ரஞ்சித் சாரின் துணை இயக்குநர். என்னுடைய கதையை நீங்கள் படிக்க வேண்டும் என்றார். நான் எதற்கு படிக்கவேண்டும் என்றேன். நீங்கள் படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க என்றார்.நான் படித்துவிட்டு நல்லா இருக்கு... நீ அப்படியே பண்ணிடு என்றேன். அதுல சேவியர்னு ஒரு கேரக்டர் இருக்குல... அதை நீங்கதான் பண்ணவேண்டும் என்றார். ஏன் எனக் கேட்டபோது நான் உங்களை நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன். நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார். இதைத் தாண்டி வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டபோது, திருச்சியில் திருடா திருடி படத்தை நீங்கள் எடுத்தபோது அங்கு வந்து இரண்டு நாட்கள் நான் வேடிக்கை பார்த்தேன். அப்போதுதான் சினிமா இயக்குநர் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் நான் எடுக்கிற படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். வெற்றிமாறன் உதவியாளர் மதி இயக்கும் செல்ஃபி படம், சில்வா மாஸ்டரின் சித்திரை செவ்வானம் படத்திலும் நடிக்கிறேன். நண்பர்கள், தெரிந்தவர்கள் கொண்டுவரும் கதையில் நடித்துக்கொண்டுள்ளேன்.