பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை எடுத்து தெலுங்கு சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து சென்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இந்தியா முழுவதும் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் என்பது படத்தின் வசூலை வைத்துதான் புரிந்துகொள்ள வேண்டும். இரு பாகங்களும் மிகப்பெரிய தொகையை வாரிக் குவித்தது.
இதனையடுத்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோரை வைத்து அடுத்த பிரமாண்ட படத்தை தொடங்கிவிட்டார் ராஜமௌலி. சுமார் 350 கோடிக்கு மேல் செலவில் உருவாகும் இப்படத்தில் சமுத்திரக்கனி, அலியா பாட், அஜேய் தேவ்கன் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஆர்ஆர்ஆர் என்று அழைக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. சிறிய இடைவேளைக்கு பிறகு அடுத்த கட்ட ஷூட்டிங் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எஸ்.எஸ். ராஜமௌலி தனிப்பட்ட விஷயமாக அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன்னிற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் அங்கு டனா என்று சொல்லப்படும் வட அமெரிக்காவிலுள்ள தெலுங்கு மக்களிற்கான மாநாடும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்குதான் ராஜமௌலி அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார் என்கிற வதந்தி பரவி வருவதால் அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ராஜமௌலி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நான் இங்கு பெர்சனல் விஷயமாக வாஷிங்டன் வந்திருக்கிறேன். டனா மாநாட்டிற்காக அல்ல. நான் வருவேன் என்று நினைத்து எனது ரசிகர்கள் ஏமாறுவதை நான் விரும்பவில்லை அதனால் இங்கு இதை உறுதி செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.