![soorarai potru team got national awards](http://image.nakkheeran.in/cdn/farfuture/x2__GOJwQJzADuN8ogsfsVRiIG9ub_B5tJWPPQ4Ajf4/1664543639/sites/default/files/inline-images/461_4.jpg)
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இதில் விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் நடிகர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று), சிறந்த திரைக்கதை - ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா (சூரரைப் போற்று), சிறந்த திரைக்கதை (வசனம்) மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர் - மடோன் அஸ்வின் (மண்டேலா), சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று), சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்), ஆகியோர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்டனர். அப்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.