தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது 'பொம்மை' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா, தான் நடிக்கும் முதல் வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரை எஸ்.ஜே. சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது போல் தெரிகிறது. இந்த சீரிஸை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க நாசர், லைலா, சஞ்சனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'வதந்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்தொடரை இயக்குநர் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளனர். இந்தத் தொடர் அடுத்த மாதம் 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
தமிழ்த் திரையுலகில் படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முன்னணி பிரபலங்கள் இணையத் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யாவும் 'வதந்தி' தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடருக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.