![gegda](http://image.nakkheeran.in/cdn/farfuture/S7wowp0b7r2a-4cpYFdvJNXO2DN_7B48FRlUiF2vE8o/1611405730/sites/default/files/inline-images/jpg-%281%29_0.jpg)
ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற 'சில்லுக்கருப்பட்டி' படம் விமர்சனரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அந்தாலஜி படமாக உருவான இப்படத்தில் வயதான தம்பதியினருக்கு இடையே மலரும் காதலை மையப்படுத்திய 'டர்டில்ஸ்' என்ற கதையின் நாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீராம் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு வயது 60. இன்று காலை 6 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டின் மாடியில் தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேங்கைச் சுற்றிப் பார்த்த சமயத்தில் கால் இடறிக் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் பல முன்னணி நடிகர்களுக்கு, தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு தற்காப்புக் கலையைக் கற்பித்து வந்தார். இதுதவிர பெண்களின் பாதுகாப்புக்கான பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ஹலிதா ஷமீமின் சில்லுக் கருப்பட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'இமைக்கா நொடிகள்', 'அதோ அந்த பறவை போல', 'வலிமை', 'கூட்டத்தில் ஒருவன்', 'எனிமி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீராமின் மறைவு திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதிச் சடங்கு வேளச்சேரி மின் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.