எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, வெளியான சமயத்திலேயே செம ஹிட் அடித்தது. ஆனால், செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமோ வெளியான சமயத்தில் ‘என்னடா இது’ என்று பார்த்தவர்கள் குழப்பமாகக் கேட்க, பின்னர் காலம் கடந்து மறு வெளியீடு செய்யும்போதெல்லாம் திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு செல்வராகவனின் பிறந்தநாளின்போது அவருக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக செல்வாவின் மாஸ்டர் பீஸ் படங்களான 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்தப் படங்கள் வெளியானபோதுகூட தியேட்டர்களில் டிக்கெட் வாங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், மீண்டும் வெளியானபோது இவ்விரண்டு படங்களும் செம கிராக்கியானது. ஷோ இருப்பதாக அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல். அப்போது கரோனா நெருக்கடி இல்லாத சமயம் 100 சதவித டிக்கெட்டும் விற்கப்பட்ட சமயத்தில் தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ஹவுஸ் ஃபுல் என்பதைப் பார்த்து பலரும் ஆச்சர்யமடைந்தனர்.
'ஆயிரத்தில் ஒருவன்' வெளியானபோது அந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தது எதிர்ப்பும் விமர்சனங்களும்தான். ‘இந்தப் படம் சோழர்களை இழிவாகக் காட்டுகிறது', ‘படம் இரத்தம், கத்திக்குத்து என்று முழுக்க வயலன்ஸாக இருக்கிறது’, ‘படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லை’ என்றும் விமர்சனங்கள் வந்தன. படத்தில் ரீமாசென், ஆண்ட்ரியா இருவரும் பேசிய சில வசனங்கள், கார்த்திக்கு இருபுறமும் நாயகிகள் கட்டிப்பிடித்துக் கிடப்பது என இன்னொரு ஆங்கிலிலும் விமர்சித்தார்கள் அப்போதைய சினிமா பார்வையாளர்கள். ஆனால், காலங்கள் மாற மாற, பழைய விமர்சனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு புதிதாக விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.
2019ஆம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை திரையரங்கில் பார்த்தவர்கள் கரகோஷங்களை எழுப்பி, காது கிழிய விசில் அடித்து, அவ்வளவு மகிழ்ச்சியாகப் படம் பார்த்தனர். ஒவ்வொருவரும் 'இந்தப் படம் வந்த சமயத்தில் பார்க்க முடியாமல் போனது', 'அதை கொண்டாடும் அளவிற்கு எங்களுடைய மனநிலை இல்லை', 'செல்வா எங்களை மன்னிச்சிடுங்க', 'நீங்க ரொம்ப ஜீனியஸ்', 'அப்போ புரியவில்லை, இப்போ புரியுது' என்றெல்லாம் சொல்கிறார்கள். '90ஸ் கிட்ஸ் இத ஓடவைக்காம தப்பு பண்ணிட்டாங்க, 2000 கிட்ஸ் நாங்க ஓட வைக்கிறோம்' என்றும் படத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக பதிவிட்டார்கள்.
தற்போது கரோனா நெருக்கடி சமயம், திரையரங்குகள் 50 சதவித இருக்கைகள் கொண்டே இயங்கப்படுகிறது. ரசிகர்களை திரையரங்கிற்குள் அழைத்து வருவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் சமயத்தில் மீண்டும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட படங்கள் தமிழகத்தில் ஒருசில திரையரங்குகளில் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் இப்படங்கள் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமான விஷயமே. குறிப்பாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பிரம்மாண்டத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்காதவர்கள் பலர் இருக்கக்கூடும், அவர்களெல்லாம் இதை எப்படியாவது ரசித்துவிட வேண்டும் என்று திரையரங்கிற்கு சென்று கொண்டாடி ரசிக்கின்றார்கள். புதுப்படம் வெளியாகும் சமயத்தில் எப்படி சமூக வலைதளங்கள் முழுவதும் அப்படங்களை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ பகிரப்படுமோ, அதுபோல பகிரப்பட்டு வருகிறது.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இசை எந்தக் காட்சியிலும் நம்மை உணர்ப்பூர்வமாகக் கடத்தும் என்பதில் சந்தேகமே இல்லை, அப்படி முழு மூச்சுடன் வேலை செய்திருப்பார் ஜி.வி.பிரகாஷ். ‘ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2’ எப்போது வரும் என்று பல கேள்விகள் எழுந்துகொண்டிருந்த சமயம், “படம் வந்தபோதே கொண்டாடியிருந்தால், தற்போது ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ வந்திருக்கும். இனிமேல் அந்தப் படத்தைக் கொண்டாடி எதுவும் ஆகப்போவதில்லை. படம் வந்தபோது எனக்கோ செல்வாவுக்கோ ராம்ஜிக்கோ எந்தப் பாராட்டும் கிடைக்கவில்லை. ஒரு விருதும் கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் பேசியிருந்தார் ஜிவி. ஆனால், ரசிகர்களின் நம்பிக்கையும் வேண்டுகோளும் வீணாகவில்லை. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை செல்வராகவன் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றும் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.