'புஷ்பா' பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 - தி ரூல் படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு சென்றதால் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் அடிப்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவடைந்தார். இப்போது கோமாவில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.1831 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டு வருகிற 11ஆம் தேதி முதல் திரையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே திரையிடப்பட்டு வந்த 3.15 நிமிட காட்சிகள் 3.35 நிமிடமாக அதிகரிக்க இருந்தது. ஆனால் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள காட்சிகள் வருகிற 17ஆம் தேதி முதல் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிபோயுள்ளதாக படக்குழு கூறியுள்ளது.