2008 ஆம் ஆண்டு சசிகுமார், ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு அறிமுகமானார் சசிகுமார். மதுரையில் 80களில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு' என அனைத்துத் துறைகளிலும் படம் சிறப்பாக இருந்தது என்ற பாராட்டைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கேங்ஸ்டர் படங்களின் லிஸ்டில் இடம் பிடித்தது.
இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளைக் கடந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சமுத்திரக்கனி. முன்னதாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், “கேங்ஸ் ஆஃப் வசேய்பூர் படத்தை எடுக்க எனக்கு இன்ஸ்பிரஷனாக இருந்ததே 'சுப்ரமணியபுரம்' படம் தான்” எனப் பாராட்டியிருந்தார். இதை அடுத்து இன்றும் அதைக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்பு ட்விட்டரில் பதிவிட்ட சசிகுமார், "சுப்ரமணியபுரம் நேற்று நடந்தது போல் உள்ளது. சுப்ரமணியபுரத்தில் 15 ஆண்டு நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. நீங்கள் அனைவரும் படத்தை ஏற்றுக்கொண்டதோடு கொண்டாடினீர்கள். இந்த முக்கியமான நாளில் நான் இயக்குநராக அடுத்த படத்தை தொடங்குகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து வீடியோ ஒன்றில் சசிகுமார் பேசுகையில், "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் 15 வருடமாக மக்கள் மனதில் இடம் பிடித்து இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மக்களோட ஆதரவு தான். இந்த படம் வந்தபோது அவர்கள் தோளில் தூக்கி கொண்டாடவில்லை. தலையில வைச்சு கொண்டாடுனாங்க. அதை என்னைக்கும் நான் மறக்கமாட்டேன். இவ்வளவு தூரம் நான் கடந்து வந்ததற்கு இப்படம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் நிறைய நல்லது கெட்டது என சினிமாவில் அனுபவிச்சிருக்கேன். எல்லாத்தையும் தாண்டி தான் வரணும். அப்படி வந்ததற்கு இப்படம் ஒரு முக்கிய காரணம்" என்றார்.