மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதையொட்டி கொச்சியில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் ப்ரித்விராஜ் கலந்து கொண்டு பேசுகையில் படம் குறித்து நிறைய விஷயங்களை பேசினார். பின்பு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக கூறினார். அவர் பேசியதாவது, “லைகா முதலில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. ரஜினி சாரை இயக்கும் வாய்ப்பு ரொம்ப முக்கியமானது. குறிப்பாக என்னைப் போன்ற ஒரு புதிய இயக்குநருக்கு. அதனால் நானும் முடிந்தளவிற்கு முயற்சி செய்தேன். ஆனால் குறிப்பிட்ட காலநேரத்திற்குள் அந்த படத்தை இயக்க தயாரிப்பு நிறுவனம் விரும்பியது. ஆனால் நான் பார்ட் டைம் டைரக்டராக இருந்ததால் ரஜினி சாருக்கு கதை உருவாக்க முடியவில்லை” என்றார்.
பின்பு அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து பேசிய அவர், “பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகிறது. நீங்கள் ட்ரைலரை பார்த்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் பார்த்தேன். சமீப கால தமிழ் சினிமாவில் நான் பார்த்ததிலேயே ஒரு சிறந்த ட்ரைலர். சிறப்பாக இருந்தது. படம் பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன். இப்படம் ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.