Skip to main content

“ஒரு அறைக்குள் 20 பேர் என்னை மிரட்டினார்கள்” - சம்பவத்தைப் பகிர்ந்த மிஷ்கின்

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
mysskin shared a experience of Onaayum Aattukkuttiyum tv rights sold incident

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தானு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மிஷ்கின் பேசுகையில் படம் குறித்து நிறையக் கூறி படக்குழுவினரை வாழ்த்தினார். பின்பு அவர் முன்பு பாட்டல் ராதா பட விழாவில் பேசியது ஆபாசமாகப் இருப்பதாக எழுந்த விமர்சனம் குறித்து மன்னிப்பு கேட்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், “என் படங்கள் நல்ல படங்கள் இல்லையா. சமூக கருத்துச் சொல்லலையா. நான் உடனே பெரிய படங்கள் இயக்கி பெரிதாக ஆக வேண்டும் என நினைக்கவில்லையா. நான் கமல் சாரிடம் சென்று திரும்பி வந்துவிட்டேன். ரஜினி சாருக்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சொல்லாமல் வந்துவிட்டேன். படங்களை நேசிப்பவன் நான். மனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பவன் நான்.

நான் பேசியது ஆபாசமாக இருக்கிறது என நீங்கள் சொல்கிறீர்கள். பிசாசு 2-வில் என் குழந்தை ஆண்ட்ரியாவிடம் கதை சொன்னேன். ஒரு தாய். அதற்குள் பேய் இருக்கிறது. அந்த பேய் நிறைய விரசமாக இருக்கிறது. அதனால் நிர்வாண காட்சிகள் தேவைப்படுகிறது. உன்னால் நடிக்க முடியுமா என கேட்டேன். கதையைக் கேட்டு நடிக்கிறேன் என சொன்னார். பின்பு ஃபோட்டோ ஷூட் வைத்தேன். என்னுடைய பெண் அசிஸ்டெண்ட் எடுத்தார். ஆண்ட்ரியா ஒரு அறைக்குள் இருந்து நிர்வாணமாக வர வேண்டும். நான் வெளியே சென்று பின்பு ஆபிஸ் போய்விட்டேன். ஆண்ட்ரியா ஃபோன் செய்து எங்க இருக்கீங்கன்னு கேட்டார். நான் சொன்னேன், அம்மா உன் நிர்வாணத்தைக் காட்டி என் படம் ஒகோன்னு பேர் வாங்கலாம். ஆனால் உன் நிர்வாண காட்சியை ஒரு இளைஞன் பார்த்தான் என்றால் என்னை போன்று இலக்கிய பார்வையில் பார்க்கமாட்டான். விரசமாகத்தான் பார்ப்பான். அதனால் அந்த காட்சி வேண்டாம் என சொல்லிவிட்டேன். அந்த காட்சியை ஒரு ஃபோட்டோ எடுத்து போஸ்டரில் போட்டிருந்தால். இன்றைக்கு அந்த படம் ரிலீஸாகியிருக்கும். இரண்டரை வருஷம் அந்த படம் ரிலீஸாகாமல் இருக்கிறது. அந்த படத்தை பார்த்த வெற்றிமாறன், இரவு முழுவதும் என்னால் பேச முடியவில்லை, காலையில் பேசுவதாக மெசேஜ் பன்னார். நான் சினிமாவையும், சினிமா மனிதரையும் சினிமா மேடைகளையும் நேசித்து கொண்டே இருக்கிறேன். எனக்கு அதைத்தவிர வேற வேலையே கிடையாது.   

நான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் எடுத்து முடித்த போது முதல் நாளில் ரிலீஸ் ஆகவில்லை. மறுநாள் இரவில் ரிலீஸானது. பத்து நாளுக்குப் பிறகு டி.வி. ரைட்ஸ் வாங்க வந்தார்கள். அப்போது எனக்கு நெருக்கமான மனிதர் பெரிய இயக்குநரும் கூட, என்னை அழைத்துக் கொண்டு போய் உனக்கு நிறைய காசு வாங்கித்தருவதாக சொன்னார். ஒரு பெரிய அறைக்குள் போனோம். 20 பேர் அந்த அறைக்குள் இருந்தார்கள். 75 லட்சத்துக்குக் கேட்டார்கள். அதிகமாக கொடுங்கள் என்றேன். கொடுக்கமாட்டேன் என சொல்லிவிட்டார்கள். பின்பு அந்த 20 தடியர்களை வைத்து மிரட்டி என்னை 75 லட்சத்துக்கு கையெழுத்துப் போட வைத்தார்கள். அந்த திரைப்படம் அந்த சேனலில் இதுவரை 80 தடவை ரிலீஸாகி இருக்கிறது.

அந்த செக்கை எடுத்துக் கொண்டு அவர்களிடம் கிழித்துப் போட்டுவிட்டுச் சொன்னேன், நான் சென்னைக்கு வரும்போது வெறும் வெள்ளை பேப்பர் ஒரு பென்சிலும் தான் எடுத்து வந்தேன். அவ்வளவு வறுமையில் இருந்து கொண்டு வந்தேன். கஷ்டப்பட்டு திருப்பி வருவேன் என்றேன். இப்போது கஷ்டப்பட்டு இந்த மேடையில் இருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் துரோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். எப்படி சக மனிதரைப் பார்த்து மோசமாக பேசமுடியும். பேச வேண்டிய கட்டாயம் வருகிறது. ஒரு விழாவில் அந்தப் அப்படத்தைக் கூவி விக்கிறோம். கொட்டுக்காளி மேடையில் நிர்வாணமாக நிக்கிறேன் என்றேன். அப்படியாவது கவனத்தை ஈர்க்கும் என பேசினேன். அது போலத்தான் பாட்டல் ராதா படத்துக்கும் பேசினேன். மன்னிப்பு கேட்க என்றைக்கும் நான் தயங்க மாட்டேன். நண்பர்களே உங்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு உங்களை கடவுளாக்குகிறேன் நன்றி” என்றார்.

சார்ந்த செய்திகள்