அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தானு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய வெற்றிமாறன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு மிஷ்கின் விவகாரம் குறித்தும் பேசினார். பாட்டல் ராதா பட விழாவில் மிஷ்கின் பேசியது முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாகவும் மதுவை ஆதரித்து பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த மேடையில் இருந்த பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட இயக்குநர்களும் மிஷ்கின் பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இது குறித்து பேசிய வெற்றிமாறன், “பாட்டல் ராதா நிகழ்ச்சி முடிந்த பின்பு நானும் அமீரும் நிறைய நேரம் பேசினோம். பின்பு மிஷ்கினுக்கும் ஃபோன் செய்து என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டேன். அவரும் அதை ஒத்துக்கொண்டு அவரது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். ஒரு நிகழ்வில் பேசியது தவறாக ஆகும் போது அதை சரி செய்துகொள்ளும் தைரியம் மிஷ்கினுக்கு இருக்கிறது. மற்றவர்கள் மனம் புண்படும்போது அதற்காக மன்னிப்பு கோருவதும் பொறுப்பேற்றுக் கொள்வதும் முக்கியமான விஷயம்” என்றார்.