தஞ்சாவூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தப்பட்டு இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர்.
இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக ஜெய் சதீஷ் என்பவருக்கு மீண்டும் பாஜக மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியானவுடன் அந்த குழுமியிருந்த பாஜகவினர் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முறையாக தேர்தலை நடத்தாமல் எப்படி மீண்டும் அவரையே தலைவராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவினர் இரண்டு பிரிவுகளாக ஒருவரை ஒருவர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 'எல்லோரும் அமைதியாக இருங்கள் பேசிக் கொள்ளலாம்' என எல்.முருகன் கேட்டுக்கொண்டதால் சலசலப்பு ஓய்ந்தது. அதேநேரம் புதிய தலைவராக ஜெய் சதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதற்கான படிவத்தில் கையொப்பமிட்டு எல்.முருகனிடம் மாவட்ட தலைவர் பொறுப்புக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். இருப்பினும் இந்த மோதல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.