![santhosh narayanan about dhanush mari selvaraj movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/CaE0qdLgx68fMstuhAleMPYKDW8HAJOImC7IHkw7NQg/1681104622/sites/default/files/inline-images/112_37.jpg)
பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 'வாழை' என்ற தலைப்பில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்கு சிறுவர்கள் நடிக்க கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுஷ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான கர்ணன் படம் வெற்றி பெற்றதால் இப்படத்தின் மீதான ஏதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' கடைசியாக 2018ல் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தை தயாரித்திருந்தது. அதன்பிறகு சில காரணங்களால் எந்தப் படங்களும் தயாரிக்கவில்லை. இந்த சூழலில் மீண்டும் படம் தயாரிக்க தொடங்கவுள்ளதால் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், "இந்த உலகம் உங்களுடையது மாரி செல்வராஜ். வாழை படம் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். மாமன்னன் படத்துக்காக காத்திருக்கிறேன். தனுஷ் சார் தொடர்ந்து நல்ல திறமை வாய்ந்த மனிதர்களை கொண்டாடி வருகிறார். இந்தப் படம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கர்ணன் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இசையமைப்பாளார் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் இசையமைப்பாளர் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் பட அறிவிப்பு வெளியான சமயத்தில் இதே போல் மாரி செல்வராஜை வாழ்த்தி சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.