
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநர்-நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், “'லவ் டுடே' படத்திற்குப் பிறகு என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஏனெனில் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுபோன்ற தருணத்தில் தான் எனக்கு 'டிராகன்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். 'லவ் டுடே' படத்தின் மூலம் என்னை கதையின் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன்.
'ஓ மை கடவுளே' எனும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்து, அவருடைய இரண்டாவது படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு பிறகு தான் என்னுடைய 10 ஆண்டுகால நண்பரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என சொல்லலாம். நாங்கள் இருவரும் நட்பையும், தொழிலையும் தனித்தனியாக பிரித்து வைத்து தான் பழகுகிறோம். அதனால் நட்பு என்றால் நட்பு ...! வேலை என்றால் வேலை..! இதில் எந்த குறுக்கீடும் இருக்காது. இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது. தொடர்ந்து அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்,'' என்றார்.