விஷால், நடிப்பில் 'இரும்புத்திரை' படம் வரும் வெள்ளியன்று (நாளை) வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்..."இரும்புத்திரை படத்தின் டீசரில் ஆதார் அடையாள அட்டையை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும், கொள்கைக்கும் எதிரான காட்சிகள் அமைந்துள்ளன. மத்திய அரசின் நலத்திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க மத்திய அரசுக்கும், சென்சார் வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 'இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இதுகுறித்து பேசியுள்ளார். அதில்..."சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டு சுமார் மூன்று மணி நேரம் என்னிடம் விளக்கம் கேட்ட பிறகே சென்சார் சான்றிதழ் தந்தார்கள். அப்போதே படம் தொடர்பான அனைத்து விளக்கங்களும் ஆதாரங்களுடன் சமர்ப்பித்து விட்டேன். மனுதாரர் எப்போது, எப்படி என் படத்தை முழுதாக பார்த்தார்...? டீசரில் இடம்பெற்றிருக்கும் ஆதார் அட்டை என்ற ஒரு வார்த்தை வசனத்தை வைத்து படத்தில் தப்பாக காட்டியுள்ளனர் என்று நீதிமன்றத்துக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. படத்தை பார்க்காமல், எந்த அடிப்படையுமே இல்லாத குற்றசாட்டு இது..?" என்றார் காட்டமாக. மேலும் 'இரும்புத்திரை' படத்தி வெளியிடாமல் தடுக்க சதி நடப்பதாக வினியோகஸ்தர் ஸ்ரீதரன், பி.டி.செல்வகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.