![producer suresh kamtchi who lodged a complaint against the Simbu family in the commissioner’s office](http://image.nakkheeran.in/cdn/farfuture/aeq98G_GDxB9OvtSbJXOn-1DvzRV8y5tnEqpKvp5q4M/1635229637/sites/default/files/inline-images/simbu_48.jpg)
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி ‘மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், சிம்புவின் பட வெளியீட்டுக்கு சிலர் நெருக்கடி கொடுப்பதாக சிம்புவின் தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ராஜேந்தர் இருவரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி. ராஜேந்தர், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீதும், தமிழ்த்திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த அருள்பதி என்பவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிம்பு, டி. ராஜேந்தர், உஷா டி. ராஜேந்தர் ஆகியோர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், "நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தின் மூலம் நான் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளேன். 'மாநாடு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட தடை விதித்திருப்பதாகவும், மாஃபியா போல் மாமூல் கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் பொய்யான குற்றச்சாட்டை டி. ராஜேந்தர் அளித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' படம் வெளியீடு தள்ளிப்போனதற்கான காரணத்தைக் கூறிய நிலையில், அவர்கள் என் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளனர். நடிகர் சிம்பு பொய்யான உறுதி அளித்து ஏமாற்றி என்னை நஷ்டத்தில் தள்ளிவிட்டார். இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.