விருத்தாச்சலம் அருகே திலகவதி என்ற கல்லூரி மாணவி ஆகாஷ் என்ற இளைஞன் அவரை வீட்டிற்குச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்தான். பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனக்குரலை பதிவு செய்கின்றனர். கொலை செய்த மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் திரைப்பட இயக்குனர் மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் பேசியுள்ளது...
"கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் திலகவதி என்கிற இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்திவிட்டு ஒருவன் தைரியமாக எஸ்கேப்பாகிருக்கான். அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறந்தும் போய்விட்டாள். இந்த சம்பவம் நடந்து முழுதாக ஒரு நாள் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று உங்களில் யாருக்குத் தெரியும்? உண்மையில் இந்த சம்பவத்தை பற்றித் தெரிந்தவர்கள் எத்தனை பேர் தங்களுடைய சமூக வலைதளத்தில் கண்டனமோ, வருத்தமோ தெரிவித்தீர்கள்?
அந்தப் பெண்ணின் குடும்பம் ஒரு விவசாய குடும்பம், அவள்தான் அந்த குடும்பத்தில் முதல் பட்டதாரி. முதல் முறையாக கல்லூரிக்கு படிக்கச் செல்லும் பெண்ணிடம் 'என்னை நீ லவ் பண்ணல' என சொல்லி கத்தியை எடுத்துக் குத்துகிறான். இதை பார்த்தும் பார்க்காததுபோல், கேட்டும் கேட்காததுபோல் இருக்கும் போராளிகளைத்தான் இந்த சமூகத்தில் கொண்டாடுகிறீர்கள். ஒரு கண்டனக்குரல், எதிர்ப்புக் குரல் கொடுத்தால்தானே இவ்வாறான புத்தி உள்ள பசங்களுக்கு பயம் வரும்? என்ன சொல்வது என்று தெரியவில்லை, கோபம்தான் வருகிறது. நினைத்துப் பாருங்கள். அந்தக் குடும்பம் அந்தப் பெண்ணை நம்பி எப்படி இருந்திருக்கும் என்று... எத்தனை கனவுகளுடன் கிராமத்திலிருந்து சென்று பி.ஏ ஆங்கிலம் படித்திருப்பாள்?
இதற்கு சினிமாக்காரர்களாகிய நாங்களும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பது மறுக்கப்படாத உண்மைதான். ஏன் என்றால் பள்ளி படிக்கும்போதே காதலித்தால்தான் ஹீரோ, லவ் பண்ணால்தான் பெருமையான விஷயம் என்று சொல்லிக்கொடுத்தது சினிமாதான். லவ் இல்லை என்றால் நீ மனிதன் அல்ல, லவ் எவ்வளவு புனிதமான விஷயம் என்று திரும்பத் திரும்ப வசனங்களை பேசி பசங்க மனதைக் கெடுத்தது சினிமாதான். அதைத் தாண்டி அரசியலும் இதை நிறைய செய்திருக்கிறது. '18 வயசு பெண்ண நீ தைரியமா லவ் பண்றா, நாங்க இருக்கோம்' என்று ஒரு பிரச்சாரமாகவே மேடை போட்டு பேசுகிறார்கள். இப்படி பசங்களை கெடுத்த கும்பல் நிறையவே இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் ஒருவனும் குரலும் கொடுக்க மாட்டான் என்று சொல்லிக்கொடுத்து தைரியம் கொடுக்கிறார்கள். அந்த தைரியம்தான் வீடு புகுந்து கொலை செய்யும் அளவிற்கு உருவாக்கியுள்ளது.
தயவு செய்து திலகவதி என்ற பெண் யாரு, எதற்காக கொலை செய்யப்பட்டாள் அப்படிங்கறத தேடி கண்டுபிடித்து ஒரு கண்டன குரலை பதிவு செய்யுங்கள். இந்தப் பசங்களுக்கு இதெல்லாம் தவறு என்பதை சொல்லுங்கள். தயவு செய்து பெண்களுக்கு தற்காப்பையும் வீரத்தையும் கற்றுக்கொடுங்கள். அதன் பிறகு அவர்களுக்கு கல்வி, ஒழுக்கம் போன்றவற்றை சொல்லிக்கொடுங்கள்."