Skip to main content

பேரரசர் சித்ரவதை காட்சி; ஆத்திரமடைந்து திரையைக் கிழித்த நபர்

Published on 19/02/2025 | Edited on 19/02/2025
During Chhava screening, man vandalises multiplex screen in gujarat

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் லட்சுமன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘சாவா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் மகாராஷ்டிரா பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரூ.140 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த 'லெஜிம்' நடனக் காட்சி தொடர்பாக மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் காட்சியை படத்தில் படக்குழு நீக்கியுள்ளது 

இந்த நிலையில் குஜராத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இப்படத்தின் இரவு நேர காட்சியின் போது திரையை ஒருவர் கிழித்துள்ளார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட பின்பு தியேட்டர் நிர்வாக ஊழியர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் திரையைக் கிழித்த நபரை கைது செய்தனர். 

சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது, “படத்தில் அவுரங்கசீப் கதாபாத்திரம் சாம்பாஜி கதாபாத்திரத்தின் தலையை வெட்டுவது போல் காட்சி வந்த நிலையில் அந்த நபர் ஆத்திரமடைந்து அவுரங்கசீப் கதாபாத்திரத்தைத் தாக்கும் நோக்கில் திரை நோக்கி சென்றுள்ளார். பின்பு தீயை அணைக்கும் கருவியால் திரையைக் கிழித்துள்ளார்” என்றுள்ளனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்