Skip to main content

“என்னை அடிக்கவும் செய்றாங்க” - பிரதீப் ரங்கநாதன் நன்றி

Published on 14/02/2025 | Edited on 14/02/2025
pradeep ranganathan speech at dragon pre release event

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில்,  “உங்களில் ஒருவனை இந்த மேடையில் நிற்க வைத்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடனான என்னுடைய தொடர்பு தற்போது வணிக எல்லையை கடந்து நட்பாக மாறிவிட்டது. தயாரிப்பாளர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நன்றி. கடினமாக உழைத்தால் வாழ்க்கை மாறும் என்பதற்கு இப்படத்தில் நடித்த விஜே சித்து ஒரு சிறந்த உதாரணம். ஹர்ஷத் கான் சிறந்த நடிகர். திறமைசாலி.

'லவ் டுடே' படத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன் என்றபோது என்னுடன் இணைந்து நடிக்க நடிகைகள் முன் வரவில்லை. என்னுடன் நடிப்பதை தவிர்க்க பல காரணங்களை சொன்னார்கள். சில நடிகைகள் மட்டும் தான் உங்களுடன் இணைந்து நடிக்க முடியாது, நான் உங்களை விட சற்று பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தான் விரும்புகிறேன் என்று சொன்னார்கள். என்னுடைய நிலை இப்படி இருக்க.. இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இயக்குநர் அஷ்வத், 'உனக்கு ஜோடி அனுபமா பரமேஸ்வரன்' என சொன்னார். அவர்கள் நடித்த பிரேமம் திரைப்படம் வெளியானபோது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் பாடிய அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில்  அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அனைவரிடமும் இயல்பாக பழகினார். காட்சியிலும் அற்புதமாக நடித்தார். அவரிடம் இருந்து அப்படி ஒரு நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை.

கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை. படம் வெளியாவதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மிஷ்கின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் சந்திக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு பரிசினை கொடுப்பார். என்னுடைய மேக்கப் உதவியாளருக்கு பிறந்தநாள் என்று கேள்விப்பட்டவுடன் தன் கையில் இருந்த கடிகாரத்தை பரிசாக அளித்து விட்டார். அவர் தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய கிஃப்ட். அவர் இந்தப் படத்தில் நடித்தது எங்களுக்கு மிகப்பெரிய கிஃப்ட்.

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் மட்டுமல்ல. படப்பிடிப்பு தளத்திலும் மாஸாகவும், கிளாஸ் ஆகவும் இருக்கிறார். படத்தில் நடிக்கும் போது மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் அவர் பழகும் போதும் அவருடைய திரைப்படங்களின் நடிக்கும் ஹீரோவை போல் தான் ஸ்டைலிஷாக இருக்கிறார். கே .எஸ். ரவிக்குமார் - கோமாளி படத்தில் அவருடன் பணியாற்றும்போது எனக்குள் சற்று பயம் இருக்கும். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுவார். இது அவர் மீது எனக்கு இருந்த பயத்தை அகற்றி மரியாதையை உருவாக்கியது. அவரை எப்போது பார்த்தாலும் எனக்காக நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என நினைக்கும் தந்தையை போன்ற உணர்வு தான் எழும். 

ஜார்ஜ் மரியான் - திரையில் பார்ப்பது போல் அவர் அப்பாவித்தனமிக்கவர். படப்பிடிப்பு தளத்தில் சிறிய தவறு செய்தால் கூட அதற்காக வருந்துவார். இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சினேகா மேடம். படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிக்கும் போது அவரின் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்தேன்” என்றார். பின்பு தொடர்ந்து பேசிய அவர், “சில பேர் என்னை அடிக்கவும் செய்றாங்க. அது யார் என அதற்குள் போக வேண்டாம். ஆனால் அவர்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்கொள்கிறேன். ஒரு செடி வளரும் போது சில பேர் அந்த இலையை பிச்சி போட்டு போவாங்க, சில பேர் மிதிச்சிட்டு போவாங்க, ஆனால் அந்த சமயத்தில் அந்த செடியின் வேர் கீழே ஸ்ட்ராங்காக வளர்ந்து கொண்டு தான் இருக்கும். அது மட்டும் இப்போ கொடுக்கிற வலி எல்லாம் தாங்கிவிட்டால் அது பெரிய மரமாக வளருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நேரத்தில் அந்த செடிக்கு தண்ணி ஊத்துற எல்லாத்துக்கும் நன்றி” என்றார். 

சார்ந்த செய்திகள்