
நடிப்பு, இயக்கம், பாடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், ‘வொண்டர்பார் ஃபில்ம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் சார்பில் எதிர் நீச்சல் படத்தில் தொடங்கி காக்கா முட்டை, நானும் ரௌடி தான், விசாரணை, காலா என பல்வேறு ஹிட் படங்களை தயாரித்திருந்தார். கடைசியாக 2018ல் அவர் நடித்த 'மாரி 2' படத்தை தயாரித்தார்.
அதன்பிறகு சில காரணங்களால் எந்தப் படங்களும் தயாரிக்காமல் இருந்தார். இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை தயாரித்து உள்ளார். இது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கவும் செய்துள்ளார். இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்நிறுவனத்தின் பேரில் உலா வரும் செய்தி போலியானவை என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரேயஸ், வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எனது பெயரிலோ அல்லது வொண்டர்பார் ஃபில்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரிலோ எந்த ஒரு நடிகர் நடிகைகள் தேர்வும் நடைபெறவில்லை. அப்படி நடந்து வருவதாக வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு நம்பரை குறிப்பிட்டு இந்த நம்பர் என்னுடைய நம்பர் இல்லை என்றும் என் புகைப்படத்தை வைத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.