மைனா, சாட்டை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் ஜான் மேக்ஸ். இவர் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மோகனவேல் என்பவரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ. 9 லட்சத்திற்கு ஒரு இடத்தை விற்றுள்ளார். பின்பு அந்த நிலத்திற்கான அசல் பத்திரம் மற்றும் ஆவணம் உள்ளிட்டவற்றை மோகனவேல் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார்.
பின்னர் ஜான் மேக்ஸ், தான் விற்ற நிலத்தில் வில்லங்கம் இருப்பதாகவும், அதனைத் தானே சரி செய்து தருவதாகவும் கூறி அசல் பத்திரத்தை மோகனவேலிடம் வாங்கியுள்ளார். பின்னர் மோகனவேலுக்குத் தெரியாமல் பொது அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு, சுரேஷ்கிருஷ்ணன் என்ற நபருக்குப் பொது அதிகாரம் வழங்கி நிலத்தை விற்பனை செய்துள்ளார். பின்பு மோகனவேல் அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்றபோது, பொது அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஜான் மேக்ஸிடம் தன்னுடைய 9 லட்சம் பணத்தைத் திருப்பித் தருமாறு மோகனவேல் கேட்டுள்ளார். ஆனால் ஜான் மேக்ஸ், பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து ஜான் மேக்ஸ் மீது மோகனவேல் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜான் மேக்ஸைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.