நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் முதல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த நிலையில், முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய நாடாளுமன்றத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். அதில் கங்கனா ரணாவத், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா உள்ளிட்ட சில நடிகைகள் அழைப்பை ஏற்று புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்டனர். மேலும் மகளீர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்றனர்.
இந்த நிலையில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த மசோதா குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, "ரொம்ப நல்ல விஷயம். அதெல்லாம் ஓகே. அது வெறும் பேப்பரில் இருந்தால் மட்டும் போதாது. அதாவது புலி, சிங்கம், கரடி எல்லாத்தையும் பேப்பரில் வரைஞ்சு வச்சிவிட்டு எங்க வீட்டில் இவையெல்லாம் இருக்கு என சொல்வதில் பிரயோஜனம் இல்லை. அது செயலில் இருக்க வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் பெண்கள்தான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என ஒதுக்கீடு இருந்தது. ஆனால் அந்த மாவட்டத்தில் இருக்கிற ஆண்களோட மனைவிகள், சகோதரிகள் என நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுபவர்கள் ஆண்கள் தான். அந்த மாதிரி இல்லாமல் நிஜமாகவே பெண்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும்.
முடிவெடுக்க வேண்டிய இடத்துக்கு பெண்கள் வந்தால்தான் பெண்களோட பிரச்சனையை அவர்களின் கோணத்தில் இருந்து பார்க்க முடியும். ஒரு சில சமயங்களில் ஆண்களுக்கு இருக்கிற உணர்வு கூட பெண்களுக்கு இருப்பதில்லை. எனக்கு தெரிந்து, கடந்த வருஷத்தில் 16வயசு குழந்தை 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு அதிகாரி அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகும் போது 6 கிலோ மீட்டர் உச்சி வெயிலில் நடக்க வச்சு 4 மாடி ஏற வச்சிருக்காங்க. அந்த அதிகாரி ஒரு பெண். ஒரு வேலை ஒரு ஆண் அதிகாரியாக இருந்தால் அந்த பெண்ணை ஆட்டோவில் கூட்டி போயிருப்பார். அதனால் இது வந்து ஒரு ஆண், பெண் என்பது இல்லை. நம்முடைய மன எண்ணம் அப்படி இருக்கிறது. எனவே இந்த 33 சதவீதம் வருவது நல்ல விஷயம். ஆனால் அது சரியாக செயலில் இருக்குமா என்பதை இனிமே தான் பார்க்க வேண்டும்" என்றார்.