மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது.
முன்னதாக இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர். அண்மையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு சிறப்பு திரையிடல் திரையிடப்பட்ட நிலையில் படத்தைப் பார்த்து ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியான நிலையில் சில நாட்களாக ஃபகத் ஃபாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அது தொடர்பான காட்சிகளை எடிட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். மேலும் தங்கள் சமூகத்தை சார்ந்தவர் எனப் பலரும் அவர்களது சமூகம் தொடர்பான பாடல்களை எடிட் செய்து பகிர்ந்து வந்தனர். இது தவறான போக்கு என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களது கருத்துகளை முன்வைத்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகையுமான லஷ்மி ராமகிருஷ்ணன் மாமன்னன் திரைப்படத்தை பற்றி பாராட்டி பேசியுள்ளார். அதில் அவர், “ மாமன்னன் படம் பார்த்தேன், மாரி செல்வராஜின் மற்றொரு சிறந்த படைப்பு. படத்தில் காட்டப்பட்டிருக்கும் வன்முறை காட்சிகள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், மற்ற காட்சிகள் அதனை மறக்க வைக்கிறது. சில காட்சிகள் என் இதய துடிப்பை நிறுத்திவிட்டன. உதயநிதி ஸ்டாலின் இதுவரை இல்லாத வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வில்லனின் மனைவி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மாரி செல்வராஜ் தான் சொல்ல நினைத்ததை மிகுந்த அக்கறையுடன் தெளிவாக சொல்லி இருப்பதை உணர்கிறேன்” என்று பாராட்டியிருந்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.