ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனகா இணைந்து நடித்துள்ள 'நட்பே துணை' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், 'எரும சாணி' விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன், மற்றும் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக, கலைமாமணி விருது பெற்ற பத்திரிகையாளர் மணவை பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இதில் கலந்துகொண்ட 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி பேசும்போது....
"அதிக வாய் பேசிய என்னை 'ஆம்பள'யில் அறிமுகப்படுத்தி, 'மீசைய முறுக்கு'-ல் என் கனவை நனவாக்கி 'நட்பே துணை'யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி. இப்படத்தின் கதையைக் கூறும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார். மீசைய முறுக்கு படத்தில் இருக்கும் மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்திவைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள். பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார். ஒருநாள் 'ஹாக்கி ஸ்டிக்' என்று கூறுவதற்கு பதில் 'பேட்' என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார். எங்களுடன் அனகாவும் காலில் அடிபட்டும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார் இப்படத்தின் கடைசி 35 நிமிடங்கள் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும். 'மீசைய முறுக்கு' படத்தின் வெளியீட்டிருக்காக கோயம்புத்தூருக்கு சென்றபோது 'எரும சாணி' விஜய்யின் அறிமுகம் கிடைத்தது. கரு.பழனியப்பன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்படும். மது, புகை இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்ககூடிய படமாக இருக்கும்.