![Mansoor Ali Khan](http://image.nakkheeran.in/cdn/farfuture/1JWJhelGVEZJ_S_JN25t63n68g5ouXyZIonsgTyFU0Y/1619692429/sites/default/files/inline-images/27_15.jpg)
திரைப்பட காமெடி நடிகர் விவேக், சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாளே மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து அவர் மரணமடைந்ததும் பொதுமக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான், கரோனா என்ற ஒன்று இல்லையெனவும் முக்கவசம் அணிவது குறித்தும் சரமாரியாக கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், தடுப்பூசி குறித்தும் எதிர்மாறான கருத்துக்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்தார். அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கோரியும் தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மன்சூர் அலிகான் தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி, முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், இது போன்ற வதந்திகளையும் அச்சத்தையும் மக்களிடையே பரப்ப கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, பொதுமக்களுக்கான கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை வழங்க வேண்டுமென நிபந்தனையும் விதித்தார்.