தனியார் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக இருக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 21ஆம் தேதி அவரது ஆண் நண்பரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்பு திரும்பி வந்த போது காரை மதுமிதா ஓட்டி வந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்துள்ளது.
அதனால் வாகனத்தை திருப்பி ஒன்வே ரூட்டில் ஓட்டி வந்துள்ளார். அதே சாலையில் காவலர் ரவிகுமார், இருசக்கர வாகனத்தில் காருக்கு எதிர்ப்புறமாக வந்துள்ளார். மதுமிதா ஓட்டி வந்த கார் ரவிகுமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிகுமாருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவிகுமாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பின்பு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்துள்ளனர். பின்பு ஆர்டிஓ சோதனைக்குப் பின் காரை ஒப்படைத்துள்ளனர். அடுத்து சில மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்துள்ளனர்.