பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அமீர், வெற்றிமாறன். மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படம் வருகிற ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. மதுவிற்கு அடிமையான ஒருவரின் வாழ்க்கைய மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
நிகழ்வில் மிஷ்கின் பேசுகையில், “மனிதன் தோன்றியதில் இருந்து குடி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆதிக்குடியில் இருந்து மது இருக்கிறது. சாராயம் காய்ச்சும் டெக்னாலஜி அனைத்தும் எனக்கு தெரியும். சினிமாவை விட அதுப் பற்றி அதிகமாக கரைத்து குடித்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் குடி இருந்து கொண்டே இருக்கிறது. குடி என்பதை இந்த சமூகம் காரி துப்பின எச்சில் போலத்தான் பார்க்கிறது. மது மக்களின் வாழ்வியலில் கலந்தது. ஆதிக்குடி மக்கள் கடவுள் வழிபாட்டின் போது மாமிசத்துடன் மதுவை படைத்து அதை தின்றுவிட்டு ஆடிகளித்து விட்டு பின்பு மறந்துவிட்டு திருப்பி காட்டுக்குள் வேட்டையாட செல்வார்கள். நாகரிகம் வளர்ந்த பிறகு அதை நாம் மாற்றிக்கொண்டோம். மது இல்லாத இடமே இல்லை. மனிதனுக்கு சில நேரங்களில் மது தேவைப்படுகிறது. நானும் மதுவை விரும்பி நேசித்து குடிப்பவன். ஆனால் ஒரு நாள் கூட அந்த மது என்னை கட்டுப்படுத்தியதில்லை. நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருக்கும் போது குடித்துவிட்டு பாலச்சந்தர், பாரதிராஜா, இளையராஜா ஆகியோரை பற்றி பேசுவோம்.
எனக்கு மதுவை விடமிகப்பெரிய போதை இருக்கு, அது சினிமா. இயக்குநர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. அதைவிட இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான். அவன் மிகப்பெரிய போதை எனக்கு. பலரையும் குடிகரனாக மாத்தியது அவர்தானு சொல்லலாம். அடிக்சன் மதுவில் மட்டும் இல்லை. எல்லா விஷயத்திலும் இருக்கிறது. கிரிக்கெட் முதல் தொடங்கி சினிமா வரை அனைத்து இடத்திலும் இருக்கிறது. மனிதனுடைய கொடுமையான அடிக்சன் மற்ற மனிதர்களை உடனடியாக எடைபோடுவது. ஒருவன் குடிக்கிறான் என்றால் இந்த சமூகமும் ஒரு காரணம்” என்றார்.