பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஸ்டீபன் தேவசி இசையமைத்துள்ளார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள இப்படத்தின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு கலந்துக்கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நிகழ்வில் சரத்குமார் பேசுகையில், “இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த காலக்கட்ட தலைமுறைக்கு சரித்திரம், இதிகாசங்களை நினைவுப்படுத்த வேண்டும், கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம், அதைப் பற்றி நிச்சயம் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும், என்று இயக்குநர் சொன்னார். அது தான் இந்த படத்திற்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். மோகன் பாபு சார், விஷ்ணு இருவருக்கும் வாழ்த்துகள், இந்த படத்தை உருவாக்கியதற்கு. கடுமையாக உழைத்திருக்கிறார்கள், உண்மையாக, நேர்மையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களது உண்மையான உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும், என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
கண்ணப்பா ஒரு வரிக் கதை தான், கண்ணப்பா யார் என்பது தெரியும், அவர் என்ன செய்தார் என்பது தெரியும். கண்ணப்பா தான் கண் தானத்திற்கு முதலில் வித்திட்டவர், என்று தொகுப்பாளினி சொன்னார்கள், அதுவும் உண்மை தானே. ஆனால் அதை எல்லாம் தாண்டி, கண்ணப்பா கதையை, உண்மை சரித்திரத்தை மிக பிரமாண்டமான முறையில் விஷ்ணு கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்காக விஷ்ணு நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். இந்த படத்திற்காக எதை செய்தாலும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் என்னை வியக்க வைத்தது. மிகப்பெரிய குழுவை நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை. பொருளாதார ரீதியாகவும், மெனக்கெடல் ரீதியாகவும் சாதாரன விசயம் இல்லை, அதை விஷ்ணு மிக சிறப்பாக செய்திருக்கிறார். அதிகமான குளிர் இருந்தாலும் மேக்கப் போட்டு 7 மணிக்கு அனைவரும் படப்பிடிப்பில் பங்கேற்பது சாதாரண விசயம் இல்லை. சிவன் மீது பக்தி இருக்கிறதோ, இல்லையோ அவரைப் பற்றிய படத்தில் மிகவும் பயபக்தியுடன் ஒட்டுமொத்த படக்குழுவும் பணியாற்றினார்கள்” என்றார்.