புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய கதையினை படமாக எடுத்திருந்தார் இயக்குநர் தரணி ராசேந்திரன். இப்படம் பல சர்வதேச மற்றும் இந்திய விருதுகளையும் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் தரணிராசேந்திரன் அடுத்த படத்தை இயக்குகிறார். இது குறித்த தகவலை தன்னுடைய சமூகவலைதளத்தின் வழியாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தரணிராசேந்திரன் தெரிவித்துள்ளதாவது, “பெரும் முயற்சியின் தொடக்கம். கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவேளைக்கு பின் மீண்டும் அடுத்த படத்தை இயக்குகிறேன். இந்த கால இடைவேளை வாழ்க்கையின் மீது அதீத நம்பிக்கையும் பிடிப்பையும் நமக்கான மனிதர்களை அடையாளம் காட்டிவுள்ளது. மிகவும் உன்மையான ஒரு படத்தை கொடுக்க முயற்சிக்கிறேன். புதிய களம் புதிய அனுபவம் காத்திருக்கும். நிச்சயம் கடுமையான , யாரும் எளிதில் கையாள முடியாத முயற்சியாக இருக்கும்.
சவாலான காட்சியமைப்பை கொண்டுள்ள இந்த படத்தை வடிவமைக்க முன் வந்துள்ள என் குழுவினருக்கும் உதவியாளர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றிகள். படத்தில் முதன்மை வேடத்தில் விடுதலை புகழ் பவானி, யாத்திசை புகழ் சேயோன், இயக்குநர், நடிகர் சமுத்திரகனி நடிக்கவுள்ளனர். மற்ற முக்கிய நடிகர்களை விரைவில் அறிமுகப்படுத்துகிறேன். எப்போதும் போலவே எனக்கு உங்கள் அன்பும் அரவணைப்பும் தேவை. அனைவரும் நன்றி” என்றிருக்கிறார்.