இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமீருக்கு ஆதரவாய் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “அமீர்... மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே; திமிராய் இரு, நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும். உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்". என்றிருக்கிறார்.
அதோடு இயக்குநர் ஞானவேல் ராஜாவிற்கும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில், “ஞானவேல் ராஜா... படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்க வேண்டும்.” என்றிருக்கிறார்.