அபி சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள மாயநதி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைத்திருக்கிறார். இவர் பாரதி படத்தில் வரும்‘மயில்போல பொண்ணு ஒன்னு’என்னும் பாடலை பாடியதற்காக தேசியவிருது பெற்றிருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் யுவன்ஷங்கர் ராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது இயக்குனர் அமீர் பேசுகையில், “இந்த படத்தின் நாயகன் அபிசரவணன் எல்லாம் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே சமூக பிரச்சனைகளில் தலையிட்டு அதற்காக போராடுகிறார். அதேபோல சௌந்தரராஜனை கூப்பிடும்போது சோஷியல் ஆக்டிவிஸ்ட் என்று அழையுங்கள் என்று சொன்னார்கள். இதெல்லாம் பெருமை என்று நான் சொல்ல மாட்டேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பே இதுபோன்ற சமூக விஷயங்களில் அக்கறை செலுத்தினோம் என்றால் வளரவிட மாட்டார்கள். நான் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஒரு கலைஞனுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். ஆனால், அது வெளியே நான்கு பேருக்கு தெரியும் அளவிற்கு இருக்க கூடாது. அரசுக்கு எதிராக இருக்கக்கூடாது. சினிமா இது முழுக்க முழுக்க வியாபாரம்தான். இங்க வெற்றிதான் பேசும், நீங்கள் செய்யும் இந்த சமூக அக்கறை விஷயங்களை பார்ப்பவர்கள் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் நல்லபடியாக எழுதுவார்கள். நீங்கள் அதற்கு அடிமையாகிவிடாதீர்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற ஒரு ஏமாற்று வேலை வேறு உலகத்துலயே கிடையாது. அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள் என்றால் வளர மாட்டீர்கள் என்று தெள்ளத்தெளிவாக அதிலிருந்தே தெரிந்துக்கொள்ளுங்கள். நான் அபிசரவணன் எப்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எந்த போராட்டமாக இருந்தாலும் கலந்துகொண்டு இருக்கிறார். இது மேடையாக இருப்பதால் நான் பாராட்டிதான் பேச வேண்டும். தனியாக இருக்கும்போது திட்டிதான் சொல்லுவேன். ஒரு மதுரைக்காரனாக இருக்கிற அந்த அக்கறையில் சொல்கிறேன்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஜல்லிக்கட்டு இறுதி நாளில் என்ன நடந்தது என்று. உங்களுக்கு எல்லாம் அந்த நாள் காலையில்தான் மெரினாவில் அடிக்கபோகிறார்கள் தெரியும். ஆனால், எனக்கு முதல் நாள் மாலையே தெரியும். அந்த இரவே அலங்காநல்லூருக்கு கர்சீப் ஒன்றை முகத்தில் கட்டிக்கொண்டு சென்று அங்கு போராட்டம் செய்பவர்களை எச்சரித்துவிட்டு வந்தேன். சேவை என்பது வேற, அரசியல் என்பது வேற. இங்கு இரண்டும் தனித் தனியாக இருக்கிறது.
தமிழகத்தில் ஒரு பெரிய சிக்கல் என்றால் என்ன தெரியுமா? ஒன்று வளரும்போது இவ்வாறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வந்துவிடுகிறார்கள். இல்லையென்றால் மிகவும் கடைசியில் வருகிறார்கள். இரண்டுத்துக்கும் நடுவில் நல்ல பீக்கில் இருக்கும்போது வாருங்கள் என்றால் ஒருவரும் வர மாட்டேன் என்கிறார்கள். அபி சரவணன், சௌந்தர்ராஜன் போன்றவர்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என்றால் தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்க மாட்டார்கள். இதெல்லாம் நான் யூகத்தில் சொல்லவில்லை, என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன். கிட்டத்தட்ட நான் எடுக்கும் படத்திற்கு மூன்று வருடத்திற்கு மேலாக ஃபைனான்ஸியர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. என்னிடம் வரும் ஃபைனான்ஸியர் அனைவரும் என்னை அரசுக்கு எதிராக பேசாதீர்கள் அப்படியென்றால் பணம் தருகிறோம் என்று சொல்கிறார்கள். கண்னை வித்து சித்திரம் வாங்குவது எவ்வளவு பைத்தியக்காரத் தனமோ, அதேபோல என்னை வித்து படம் எடுப்பது பைத்தியக்கார தனம். நான் சினிமாவிற்குள் வந்து 15 வருடம் ஆகிவிட்டது. நான் உங்களை போல அல்ல, மிடிலில் நிற்கிறேன். ரொம்ப கடைசியாகவும் வரமாட்டேன். போக்கிடம் இல்லை என்றபோது அரசியல் பேசுவது சரியானது என்று நான் நினைக்கவில்லை. அதனால் அப்படி ஒரு சினிமா எடுக்க வேண்டும் என எனக்கு தேவையில்லை. எனக்காக சினிமாவை நானே உருவாக்கிக்கொள்கிறேன்” என்றார்.