
சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகி வரும் படம் ‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா, முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் சத்யா இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வடிவேலுவின் பிறந்தநாளான செப்டம்பர் 9ஆம் தேதி வெளியானது. அதில் சுந்தர்.சி மற்றும் வடிவேலு இடம்பெற்றிருந்த நிலையில் வடிவேலுவின் தோற்றம் அவரின் முந்தைய படங்களின் தோற்றத்தைவிட வித்தியாசமாக இருந்தது. மேலும் படத்தின் கேங்கர்ஸ் என்ற எழுத்தில் கால்பந்து மற்றும் விசில் போன்ற விளையாட்டு தொடர்பான பொருட்கள் இடம்பெற்றதால், கால்பந்து விளையாட்டு சம்பந்தமாக இப்படம் இருக்குமெனத் தெரிந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.