
2024ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்காக விருது வழங்கும் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக அனோரா திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை வென்றது.
இதில் இப்படத்தின் இயக்குநர் ஷான் பேகர்(Sean Baker) சிறந்த நடிகை பிரிவை தவிர்த்து மற்ற நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் ஒரு படத்திற்காக அதிக விருதுகளை வாங்கிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை ஷான் பேகர் படைத்தார்.
விழா மேடையில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வாங்கியவுடன் ஷான் பேகர் பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர் பேசியதாவது, “பாலியல் தொழில் செய்யும் நபர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த மரியாதை. இந்த விருதை அவர்களுக்காக சமர்பிக்கிறேன்” என்றார். இப்படம் ஒரு பெண் பாலியல் தொழிலாளி திருமணம் செய்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.