![christopher nolan](http://image.nakkheeran.in/cdn/farfuture/IL-D2dZunxeDkrrTOZEy446pF11QHpdZ11SBvl1X214/1593582249/sites/default/files/inline-images/christopher-with-anne.jpg)
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 'டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் எடுத்துள்ள திரைப்படம் 'டெனட்'. இது அறிவியல் வகையிலாக இதுவரை வெளியான படங்களை போல் அல்லாமல் புதுமையான ஒரு தலைப்பில் எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் மறு ரிலீஸ் தேதி குறித்து செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் க்றிஸ்டோபர் நோலனின் ‘ப்ரஸ்டீஜ்’ மற்றும் ‘டார்க் நைட் ரைஸஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஆன் ஹாத்வே. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நோலன் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. அந்தப் பேட்டியில், “அவர் தனது படப்பிடிப்புத் தளங்களில் நாற்காலிகளை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நாற்காலிகள் இருந்தால் மக்கள் அதில் உட்காருவார்கள், உட்கார்ந்தால் வேலை நடக்காது என்று காரணம் கூறுவார். அவருடைய படங்கள் தொழிநுட்ப ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும், அபாரமானவை. அவை சரியான நேரத்தில் குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடிக்கப்படும். அதற்கு இந்த நாற்காலி ரகசியமும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.
இது சமூக வலைத்தளங்களின் கிறிஸ்டோபர் நோலனுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருமாறியது. எப்படி செட்டில் நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உட்காராமல் பணிபுரிய அனுமதிக்கிறார்கள் போன்ற பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் ஆன் ஹாத்வே பேசியதற்கு மறுப்பு தெரிவித்து நாற்காலி விஷயத்தை விளக்கமளித்துள்ளார் நோலனின் செய்தித்தொடர்பாளர். “கிறிஸ்டோபர் நோலன் படபிடிப்பில் அனைவருக்கும் நாற்காலிகள் போடப்படும், ஆனால், கிறிஸ்டோபர் நோலன் அவருக்கான நாற்காலியில் எப்போதும் அமர மாட்டாரே தவிர மற்றபடி அனைவருக்கும் நாற்காலி உண்டு, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
கிறிஸ்டோபர் நோலன் படபிடிப்பில் செல்போன் பயன்படுத்தவும், சிகரெட் புகைக்க மட்டும்தான் தடை உண்டு தவிர நாற்காலியில் அமருவதற்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.