![bussy anand scolded his tvk party member](http://image.nakkheeran.in/cdn/farfuture/IgeRGHuARQbrjsMBV0VtL9DyEP6aUglI49dXN1Bx6l0/1708344784/sites/default/files/inline-images/163_49.jpg)
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் கூட்டமாக, கடந்த 7 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுள்ளனர். “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்” உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அக்கட்சியினர் ஏற்றுக் கொண்டனர்.
மேலும் த.வெ.க தலைவர் விஜய்யின் ஆலோசனையின் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவரால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்” உள்ளிட்ட பல முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர், புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்தார். உடனே கோபப்பட்ட புஸ்ஸி ஆனந்த், காலில் விழாதீங்க என சொல்லியும் ஏன் விழறீங்க எனக் கடிந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.