உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து கொண்டு மக்களுக்கு வீடியோ மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தன் தயாரிப்பில் உள்ள படங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
''கோவிட்- 19 என்னும் கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து, ஒருமித்த கருத்தோடு முடிவு எடுத்து உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.