தெலுங்கில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'போலா ஷங்கர்'. இப்படம் தமிழில் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக் ஆகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் மற்றும் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் லக்ஷ்மி மேனன் நடித்திருந்த நிலையில், தெலுங்கில் தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போய் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் இயக்குநர் ஒரு நேர்காணலில், "வேதாளம் படத்தை பார்த்தால் 10 மடங்கு க்ரிஞ்சாக இருக்கும். ஆனால் போலா ஷங்கரை நான் அப்படி இயக்கவில்லை. தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றது போல் படத்தை உருவாக்கியுள்ளேன்" எனக் கூறினார். இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் உள்ளிட்ட தமிழ்ப் பட ரசிகர்கள் எதிர்வினையாற்றி வந்தனர்.
இதையடுத்து இயக்குநர் அதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "2015ல் வேதாளம் படத்தை பார்த்த போது மிகவும் பிடித்திருந்தது. அந்த கதையை ரசித்தேன். இயக்குநர் சிவா சார், அண்ணன் தங்கச்சி பாசத்தை வலுவாக காட்டியிருப்பார். அந்த பாசம் லட்சக்கணக்கான மக்களிடம் பிரதிபலித்தது. அதை தெலுங்கில் காட்ட விரும்பினேன். 2009ல் அஜித்தின் பில்லா படத்தை பிரபாஸை வைத்து ரீமேக் செய்தேன். இப்போது மீண்டும் அஜித் சாரின் ஆக்ஷன் படமான வேதாளம் படத்தை சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்துள்ளேன்" என்றார்.