தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் இந்த சமயத்தில் இயக்குனர் அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ள 'தடை அதை உடை' என்ற இசை ஆல்பம் இன்று வெளியானது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அப்போது, விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஸ்டெர்லைட் பிரச்சனையை பற்றி பேசியபோது... "ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிராக இத்தனை அடக்குமுறைகள் ஏன்...? எமர்ஜென்சி காலத்தை விட இப்போது தான் தமிழகத்தில் அதிகமாக குண்டர் சட்டம் ஏவி விடப்படுகிறது, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தமிழக அரசின் நடவடிகைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அது அறவழியில் வித்தியாசமான போராட்டமாக இருக்கும். தமிழக அரசால் அந்த போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் திருச்சியில் ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் மோதிக் கொண்டதில் சீமான் ஆதரவாளர்களை மட்டும் கைது செய்திருப்பது ஏன்....? வைகோ மீது மட்டும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்....? சீமானை கைது செய்ய போலீசார் அவரை தேடி வருகிறார்கள். எங்களது வலிமையையும், சக்தியையும் அடக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.