முத்துக்குமார் இயக்கத்தில் எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் தொடர் ‘அயலி’. இதில் அறிமுக நடிகை அபி நக்சத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் வருகிற 26 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இத்தொடரின் டிரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரைலரை பார்க்கையில் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளைத் தகர்த்தெறிய ஒரு மாணவி செயல்படுவது போல் அமைந்துள்ளது.
இந்தத் தொடர் பற்றி இயக்குநர் முத்துக்குமார் பேசுகையில், “இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கக்கூடிய கதைகளை முன்வைக்கின்றன. மேலும் ஒரு பிரச்சாரமாக தோன்றாத வகையில் அந்த மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயலி. இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி மற்றும் அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும்" என்றார்.