தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுவது மற்றும் நிகழ்ச்சிகளில் நடந்துகொள்வது அவ்வப்போது சர்ச்சைகளாக மாறும். சமீபத்தில், ராஜமௌலி மீது இந்தியாவில் உள்ள சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் பொறாமையில் உள்ளதாகவும் அவரை கொலை செய்ய ஒரு குழுவாக திரண்டுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே ஒரு டேஞ்சரஸ் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த நடிகையின் கால் விரலை கடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு படித்து முடித்த படிப்பின் சான்றிதழை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் தேர்ச்சி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று எனது பி.டெக் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1985 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதனை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பட்டம் வாங்கியுள்ள ராம் கோபால் வர்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.