Skip to main content

"பேசுவதற்கு முன் யோசியுங்கள்" - ரஹ்மானின் மகள் பதிவு வைரல்

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

ar rahman concert issue Khatija Rahman post viral

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் (10.09.2023) சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

 

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

 

இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தங்களது டிக்கெட் நகலை பகிரவும் எனவும் குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சீனுராமசாமி, சுரேஷ் காமாட்சி, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே ரஹ்மானின் மகள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களும் ஏ.ஆர். ரஹ்மானை மோசடி செய்தவர் போல் சித்தரிக்கின்றனர். சிலர் மலிவான அரசியலை செய்கின்றனர். 

 

இசை நிகழ்ச்சியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே 100 சதவீத காரணம். ஆனால், அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டு ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய இசைக் கச்சேரிகளின் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், "2016 ஆம் ஆண்டு, நெஞ்சே எழு என்ற தலைப்பில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை, கோவை, மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

2018 ஆம் ஆண்டு, கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உதவினார். 2020 ஆம் ஆண்டு, கரோனா காலகட்டத்தின்போது பல குடும்பங்கள் உள்ளிட்ட பலருக்கு அந்த மாதத்துக்கு தேவையான உதவிகளை செய்தார். 2022 ஆம் ஆண்டு, லைட்மேன்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் இலவச இசை நிகழ்ச்சி நடத்தினார். அதனால் பேசுவதற்கு முன் யோசியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்