டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக்குதான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞருடன் கடந்த 2ஆம் தேதி (02.04.2024) ஆஜரானார். அப்போது அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று (09.04.2024) சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகம், சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் உள்ள அமீரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. பின்பு அமீருக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் என்.சி.பி விசாரணை, அமலாக்கத்துறை சோதனை குறித்து அமீர் பேட்டியளித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அமீர், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ரெய்டில் சில ஆவணங்கள் எடுத்திருக்காங்க. என்ன ஆவணங்கள் என்பதை அவங்களே சொல்வாங்க. நான் சொல்வது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தில் நான் தொடக்க காலகட்டத்திலிருந்து சொல்லிக்கொண்டு வருவது, எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்பது தான். சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படுகின்ற குற்றத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதை நிரூபிப்பேன். இறைவன் மிகப்பெரியவன். விசாரணை முடிந்து நிச்சயமாக இது குறித்து விரிவாக பேசுவேன். விசாரணை இன்னும் முடிவடையாத போது நான் எதுவும் பேசக்ககூடாது. விசாரணையை சிக்கலாகவும் மாற்றக்கூடாது. விசாரணை நேர்மையாகத் தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது” என்றார்.