மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார், அமலா பாலை வைத்து ‘ஆடை’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்போதே சர்ச்சையாக இருந்த நிலையில் டீஸர் அதற்கு அடுத்த கட்டமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அமலா பால் ஆடையின்றி நடித்துள்ள ஷாட் அந்த டீஸரில் இடம் பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
![amala](http://image.nakkheeran.in/cdn/farfuture/aTWXSdXjd0RHizZix1S62DgJRvoDVf0XW5nxyHb6W-4/1561010331/sites/default/files/inline-images/amala-paul_0.jpg)
தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகையும் எடுக்காத இந்த முயற்சியை அமலா பால் எடுத்திருப்பதால் பலரும் பாராட்டிவருகின்றனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே அமலா பால் நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் சமூக சிக்கல்களை பேசுவதாக சொல்லப்படுகிறது.
இப்படம் குறித்து இயக்குநர் ரத்ன குமார் கூறும்போது, “தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கத்தை ஆடை படம் பேசுகிறது. அமலாபால் ஆடை இல்லாமல் தோன்றுவது சிறிது நேரம்தான். அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் உள்ளன. பைக் ஓட்டுதல் சண்டை காட்சிகள் என்று கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அமலாபால் திரையுலக வாழ்க்கையில் ஆடை முக்கிய படமாக இருக்கும்” என்றார்.
தணிக்கை குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.