தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் வெளியாகவுள்ளன. இதனால் அவர்களது ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட ரிலீஸை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்ளும் அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வருவதால் திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரியில் 'துணிவு' பட வெளியீட்டை முன்னிட்டு 55 அடி உயரத்தில் அஜித்திற்கு கட்அவுட் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். அதோடு ஒரு சில ரசிகர்கள் 55 அடி உயர கட்அவுட்டிற்கு பயம் இல்லாமல் மேலே ஏறி மலர் தூவியும் பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் தங்களது ரசிகர்களிடம் இது போன்று உயிரை பணயம் வைத்து எந்த ஒரு கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. அதனைத் தவிர்த்து விட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் என அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால், தொடர்ந்து அவர்களின் பேச்சை கேட்காமல் ரசிகர்கள் இப்படி செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
மேலும், இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, "துணிவுடன் வாழ்க்கையில் இருப்பது அவசியம். ஆனால் அது நல்ல செயல்களில் இருக்க வேண்டும். இந்த வீடியோவை பார்க்கையில் இளம்வயது ரசிகர்கள் போல் உள்ளனர். அவர்களது பெற்றோர்கள் எவ்வளவு கனவுடன் பிள்ளைகளைப் படிக்க வைத்திருப்பார்கள். பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட சூழலில், அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து 55 அடி உயரத்தில் நின்று கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தப்பித் தவறி கீழே விழுந்தால் என்ன ஆகும். இது போல் தவறி விழுந்து பல ரசிகர்கள் இறந்து போயுள்ளனர். இது போன்று செயல்கள் கூடாது என்று அவர்களது விருப்ப நாயகர்களே சொல்லிய பிறகும், இவர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தத்திற்கு உரிய விஷயம்" என்கின்றனர்.