இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் மலையாளத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் சூர்யாவுக்கு நடிகர் அஞ்சாதே நரேன் டப்பிங் கொடுத்திருக்கிறார். இந்த அனுபவத்தை அறிக்கையின் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்," மிகப்பெரிய நடிகரான சூர்யாவிற்கு குரல் கொடுத்ததில் பெருமிதம் அடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற சூரரைப்போற்று படத்திற்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.
ஜெய் பீம் படத்துக்கு டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். நான் நினைத்தது மாதிரி இல்லாமல் மிகவும் சவாலாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு வசனம் மிக நுட்பமாக இருந்ததால் காட்சிக்கு காட்சி கவனித்து பேசியது புது அனுபவமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. இந்த அனுபவம் மேலும் சினிமாவை கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் ஜெய் பீம் படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் டப்பிங் பேச வாய்ப்பளித்த சிபு மற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி " எனக் குறிப்பிட்டுள்ளார்.