
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர், தன்னுடைய தேர்ந்த நடிப்பால், ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். அதனை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் படித்தார். கடைசியாக கடந்த 2023இல் வெளியான ‘இறுகப்பற்று’ படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு தள்ளியே இருந்தார்.
இந்த சூழ்நிலையில், சில தினங்களாக தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் ஆளே மாறிப் போன வித்தியாசமான தோற்றத்தில் ஆபாசப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீ மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தினந்தோறும் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் தெரிவிப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘நடிகர் ஸ்ரீராம் நிபுணத்துவ மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலால் சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் ஸ்ரீ விலகியுள்ளார் என அனைத்து நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் தனது மீட்பு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துவதால், அவரது தனிப்பட்ட உணர்வுக்கு அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் அவரை மேலும் வருத்தமடைய செய்யும். அதனால், அவரது உடல்நலம் குறித்த வதந்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய அனைத்து ஊடக தளங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவரது தற்போதைய நிலை குறித்து கருத்துக்களையும், நேர்காணல்களையும் நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். நேர்காணல்களில் சில நபர்கள் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை, அதை முற்றிலுமாக மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.